வேடன் ஒருவன் புலிக்கு பயந்து ஓடி வில்வ மரம் ஒன்றின் மீது ஏறிக்கொண்டான். இரவு முழுவதும் புலி கீழேயே இருந்ததால் தான் தூங்காமல் இருக்கும்பொருட்டு வில்வ இலையைப் பறித்து போட்டான். அது கீழே இருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தது. சிவராத்திரி தினமான அன்று வில்வத்தைப் பறித்து சிவலிங்கத்தின்மீது போட்டதால் வேடனுக்கு சிவபெருமான் காட்சி தந்து அருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.
மூலவர் 'வில்வவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'வளைக்கை நாயகி', 'சர்வஜனரட்சகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள். அம்பாளுக்கு முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தனது மூச்சுக் காற்றால் யமதர்மனை நந்தி தேவர் விரட்டியதால் இங்கு திரும்பிய நிலையில் காட்சி தருகிறார். எல்லா நந்திகளும் திரும்பிய நிலையிலேயே இருக்கின்றன. இங்கு தட்சிணாமூர்த்தி கல்லால மரம் இன்றி காட்சி தருகின்றார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
|